மானிப்பாய் இந்துக் கல்லூரியின் வரலாறு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ மிசனறிமார்களால் மேற்கொள்ளப்பட்ட சமயப் பிரச்சாரம் காரணமாகப் பெருந்தொகையான இந்து, பௌத்த மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக் கொண்டனர். இக் கால கட்டத்தில் ஆங்கிலக் கல்விக்கும், கிறிஸ்தவ சமயத்திற்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் ஆங்கிலக் கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்குடன் இந்து, பௌத்த சமயத்தவர்கள் மிசனறிப் பாடசாலையில் கல்வி கற்பதில் நாட்டம் கொண்டனர். 

இக்கால வேளையில் “தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று” என்ற பொய்யாமொழிக்கிணங்க அவதரித்த நாவலர் பெருமான், இம்மத மாற்றத்திற்கு எதிரான சைவ சமய ஆதரவு நடவடிக்கையினை மேற்கொண்டார்.

இக்கால கட்டத்தில் மானிப்பாய் இந்து சமயச் சூழலில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்க ஏற்ற பாடசாலை இல்லாக்குறை மானிப்பாய் மக்களால் உணரப்பட்டது. இவ்வுணர்வு 1910ம் ஆண்டு மானிப்பாய் விவேகானந்த மண்டபத்தில் திரு.மைரோன் பெல்ப்ஸ் (Myron Phelps) என்பவரால் ஆற்றப்பட்ட உரையினால் ஊக்குவிக்கப்பட்டது. இதனால் மானிப்பாயில் வசித்த வசதிமிக்க சிலர் S.K.லோட்டன் (Lawton) அவர்கள் தலைமையில் ஒன்றுகூடி பாடசாலை கட்ட பணம் சேர்க்கத் தொடங்கினர். இக்குழு முதலாவதாகச் சந்தித்த நபர் திரு.W.சங்கரப்பிள்ளை அவர்களாவார். மானிப்பாயின் முன்னணிப் பிரஜையாகத் திகழ்ந்த திரு.W.சங்கரப்பிள்ளை அவர்கள் கட்டிடங்களுக்குத் தேவையான காணியையும் பெருந்தொகைப் பணத்தையும் அளித்து இம் முயற்சிக்குப் பெரும் ஊக்கமளித்தார். 

இதன் பின்னர் சமூகப் பெரியோர்களால் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு திரு.W.சங்கரப்பிள்ளை அவர்கள் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். அன்றைய கூட்டத்தில் அவரால் பாட சாலைக்கான அத்திவாரக் கல் பிரதம நீதியரசர் Sir Joseph Hutchinson அவர்களால் 1910 யூலை 4ஆம் திகதி நாட்டப்பட வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. 

அதற்கிணங்க 1910ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி பிரதம நீதியரசர் Sir Joseph Hutchinson அவர்களால் இக்கல்லூரி யின் அத்திவாரக் கல் நாட்டப்பட்டது. கட்டட வேலைகள் பூர்த்தியானதும், அவ்வளவு காலமும் மானிப்பாய் விவேகானந்த மண்டபத்தில் இயங்கிய இப்பாடசாலை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. 

ஆரம்பத்தில் ஹட்சிசன் மண்டபமும் அதனுடன் இருந்த ஆறு வகுப்புக்களுமே காணப்பட்டன. மேல்மாடியுடன் கட்டத் தொடங்கிய இம்மண்டபம் திரு.W.சங்கரப்பிள்ளை அவர்களின் மறைவினால் தனிக்கட்டிடமாகவே அமைந்துவிட்டது. அன்று அவர் விதைத்த விதைதான் இன்று முளைத்துப் பெருவிருச்சமாகி பூத்துக் காய்த்து கனிந்து பெரும் பயன ளித்து வருகின்றது. 

இவ்வாறு எழுச்சி பெற்ற எமது கல்லூரியின் முதல் அதிபராக திரு.S.வீரசுவாமிப்பிள்ளை அவர்கள் 1910ல் நியமிக்கப்பட்டார். இவர் மாணவரின் ஒழுங்கு, கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தியவராவார். பிற்காலத்தில் இராமநாதன் கல்லூரி அதிபராகவும் தர்ம அசோகக் கல்லூரியின் கணிதப் பேராசிரியராகவும் கடமையாற்றியவர். 

திரு.S.வீரசுவாமிப்பிள்ளை அவர்களைத் தொடர்ந்து, 1911ல் திரு.P.சபாபதிப்பிள்ளை அவர்கள் மூன்று ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றினார்.  1913இல் திரு.G.சிவராவ் அவர்கள் அதிபரானார். இவர் சிறந்த கல்வி நிர்வாகியாவார். 

1914இல் திரு.பி.சபாபதிப்பிள்ளை, திரு.M.சபாரட்ணசிங்க ஆகியோர் கல்லூரியின் அதிபர் பதவியை வகித்தனர். திரு.சபாரத்தினசிங்க அவர்கள் இணைப்பாடவிதான செயற் பாடுகளுக்கு முக்கியம் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து 

1915 தொடக்கம் 1916 வரை திரு.T.P.ஹட்சன் பரமசாமி அவர்கள் அதிபர் பொறுப்பினை ஏற்றுப் பணி புரிந்தார். அவரது காலத்தி லேயேதான் பழைய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. 

கல்லூரியின் அடுத்த அதிபராக திரு.J.H.Crosette அவர்கள் 1917 தொடக்கம் 1920 வரையான காலப் பகுதியில் கடமையாற்றினார். இவர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தரமானது பட்டினத்திலுள்ள மற்றைய பெரும் கல்லூரிகளுடன் ஒப்பிடக் கூடியதாய் உயர்த்தப்பட வேண்டும் என்று எண்ணி, பெரிய விளையாட்டு மைதானத்தினை உருவாக்கியதுடன், பல வகுப்பறைகளையும் இலக்கிய மன்றம், சாரணர் இயக்கம் என்பவற்றினையும் ஏற்படுத்தினார். இவரது காலத்திலேதான் இக் கல்லூரியின் முதற் சஞ்சிகை வெளிவந்தது. இவரது காலம் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் மேன்மைக்கு வித்திட்ட காலம் எனலாம்.

இவரின் சேவையைத் தொடர்ந்து 1920 ஆம் ண்டு அமரர் ஆண்டு M.சிவபாதசுந்தரம் அவர்கள் இக் கல்லூரியின் அதிபர் பதவியை அலங்கரித்தார். இக்காலப் பகுதியில் தமிழும் சைவமும் முதலிடம் பெற்றது. 

1921-1922 வரையான காலப்பகுதியில் அடுத்த அதிபராக திரு.சின்னத்தம்பி மயில்வாகனம் (சுவாமி விபுலானந்தர்) அவர்கள பணியாற்றினார். இக் காலப்பகுதியில பொதுப் பரீட்சை, விளையாட்டு துறை, சமயத்துறையில் இக்கல்லூரி பெருமை பெற்றது.

இதன் பின் திரு.V.வீரசிங்கம் அவர்கள் 1922 – 1951 வரையான காலப்பகுதியில் அதிபராக சேவையாற்றினார். இக்காலம் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பொற்காலம். இவரின் தலைமையில் சலியாத உழைப்போடு ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து கைகோர்த்து நின்றதால் கல்லூரி பல மகத்தான சாதனைகளையும் வெற்றியையும் பெற்று வீறுநடை போட்டது. இவருடைய காலத்தில் 1923இல் பாடசாலைக்கான இலச்சினை (Crest) வடிவமைக்கப்பட்டது. இது நான்கு பிரிவுகளைக் கொண்டது. மத்தியில் இலங்கைப் படம் உண்டு. இந் நான்கு பிரிவுகளாவன:

ஓலைச்சுவடி – கலையையும்  
ஓம் -ஆன்மாவையும் 
தாமரை -இதயத்தையும் 
கை -வலிமையையும் குறிக்கும்.
இவற்றின் ஒன்றிய செயற்பாட்டின் மூலம் இலங்கை ஒளி பெறுகின்றது என்பது இவ் இலச்சினையின் அர்த்தமாகும். 

விளையாட்டுத்துறையில் திரு.V.வீரசிங்கம் அவர்களின் காலம் உன்னத காலமாக விளங்கியது. 1924ல் நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டு, இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன. 1944இல் இவரது காலப்பகுதியில்தான் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பெண் மாணவிகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இவரைத் தொடர்ந்து திரு.C.நவரட்ணம் அவர்கள் 1951-1955 வரையான காலப்பகுதியில் அதிபராகக் கடமையாற்றினார். நான்கு ஆண்டுகள் கடமையாற்றினாலும் அவர் காலத்திலேயே பெண்கள் கல்லூரிக்கென புறம்பாக கட்டிடம் அமைக்கப் பட்டது. கல்லூரிக்கு மேற்குப் புறமாக அமைந்த 14 பரப்புக் காணி வாங்கப்பட்டு விளையாட்டு மைதானம் பெரிதாக்கப்பட்டது. 

1954ஆம் ஆண்டு மேலும் 13 1/2 பரப்புக் காணி பழைய மாணவர் சங்கத்தால் வாங்கப்பட்டது. ஏழு அறைகள் கொண்ட செல்லமுத்து மண்டபம், வாகீசர் மண்டபம் என்பன கட்டப்பட்டன. மேலும் பட்டம்மாளின் இசைக் கச்சேரி மூலம் கிடைத்த பணம் கொண்டு உயிரியல் ஆய்வுகூடம் கட்டப்பட்டது. இது திரு.V.வீரசிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களுக்குச் செல்லும் இரு மாணவர்களுக்கான மகாதேவா புலமைப்பரிசில் (Mahadeva scholarship) இக்காலத்திலேயே வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திரு.K.முத்துவேற்பிள்ளை 1955 – 1972 வரை அதிபராகப பணிபுரிந்தார். இவர் காலத்திலேயே பல புதிய கட்டிடங்கள் எழும்பின. ஏறக்குறைய 16 பரப்புக் காணி கல்லூரிக்கு கிழக்குப் புறமாக வாங்கப்பட்டு. பெண்கள் பகுதி விஸ்தரிக்கப்பட்டது. 1959இல் பேராசிரியர் சின்னத்தம்பி (பழைய மாணவர்) நவீன வசதி கொண்ட நூல் நிலையத்தை அமைத்துக் கொடுத்தார். ஆரம்பப் பாடசாலைக்கென மஸ்கென் நிறுவனம் (Mascon Ltd) ஒரு கட்டிடம் அமைத்துக் கொடுத்தது. வாகீசர் மண்டப மும் மூத்ததம்பி கட்டிடத் தொகுதியும் முத்துவேற்பிள்ளை மண்டபத்தில் இணைந்தது. 

திரு.சிவதாசன் அவர்களின் மறைவை யொட்டி அவர் ஞாபகார்த்தமாக அவர் பெயரில் பார்ப்போர் கூடம் (Pavilinon) நிறுவப்பட்டது. 1963இல் பெண்கள் பிரிவு தனிப்படுத்தப்பட்டது. இவ்வளவும் அதிபர் முத்துவேற்பிள்ளையின் விடாமுயற்சியும், அயராத ஊக்கமும் என்றால் மிகையாகாது. இவரது காலத்தில் வைத்தியத்துறை, பொறியியற்துறைக்கு பெருமளவு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பல காலமாக கல்லூரி மட்டத்தில் நடந்த நாடகப்போட்டி, இவர் காலத்திலேதான் நாடக விழாவாக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வசதி செய்யப்பட்டது. இதனால் ஸ்தாபகர் தினவிழா மூன்று நாள் விரிவுபடுத்தப்பட்டது.

1959ஆம் ஆண்டு புதுடெல்லியிலும், 1963இல் இந்தோனேசியாவிலும் நடந்த சர்வதேசக் கல்வி மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டதன் மூலம் எமது நாட்டிற்கு பெருமை தேடித்தந்த திரு.M.பேராயிரவர் அவர்கள் 1972இல் அதிபராகப் பதவியேற்றார். இவர் காலத்தில் 1973இல் மாணவர் விடுதி அமைக்கப்பட்டு முப்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கல்வி பயின்றனர். மரவேலை, உலோக வேலைக்கு ஒரு கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் உயர்தர வகுப்புகளுக்கு வணிகத்துறை ஒரு பகுதியாக்கப் பட்டு அதற்கெனத் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

04.04.1979 இல் கல்லூரி ஸ்தாபகர் வே.சங்கரப்பிள்ளை அவர்களின் சிலையை பாடசாலை வழாகத்தில நிறுவி தன் நன்னிலையைக் கல்லூரித் தாய்க்குச் சமர்ப்பித்து 30.06.1979 இல் தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

1979- 1983வரை கல்லூரி அதிபராக திரு.S.T.சாறி அவர்கள் கடமையாற்றினார். இவரது காலத்திஇவரது காலத்திலேயே மஸ்கன் தொழினுட்பக் கட்டிடம் நிறுவப்பட்டது. கொழும்பு மஸ்கன் ஸ்தாபனமும், அஸ்பெஸ்டஸ் சீமென்ட் ஸ்தாபனமும் இணைந்து “மஸ்கன் தொழினுட்பக் கூடம்” ஒன்றினை அமைத்துப் பாடசாலைக்கு உதவியுள்ளமை ஓர் வரப்பிரசாதமாகும்.  

பாடசாலைக் கட்டிடத் தொகுதியில் இரண்டு மாடிகள் பூரணப்படுத்தப்பட்டன. கல்லூரியின் அலுவலகத்திற்கென அதிபர் வீரசிங்கம் ஞாபகார்த்தமாக இரு மாடிக் கட்டிடம் நிறுவப்பட்டது. 

1983ல் திரு. V.சுந்தரலிங்கம் அவர்கள் குறுகிய காலம் கல்லூரியின் பதில் அதிபராகச் சிறப்பாகக் கடமை யாற்றியுள்ளார். 1983 – 1989 வரை திரு.S.V.மகேசவேலு அதிபர் பணியை வகித்தார். 

இவர் காலத்தில்தான் முறைசாராக் கல்வி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு வெற்றிகரமாக பட – வரைஞர், ஆங்கிலத் தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சி நெறிகள் இயங்கிக் கொண்டிருந்தன. சாறியின் மேல்மாடிக் கட்டிடம் இவர் காலத்திலேயே பூர்த்தி செய்யப்பட்டது. கல்லூரியின் பவளவிழா 1986ஆம் ஆண்டு அதிபர் மகேசவேலு அவர்கள் அதிபராக இருந்த காலத்திலேயே கொண்டாடப்பட்டது.

1989-1998வரையான காலப் பகுதியில் திரு.C.கேசவராஜன் அவர்கள் அதிபராகக் கடமை புரிந்தார். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் வரலாற்றிலேயே கொத்தணி அதிபராகக் கடமையாற்றிய பெருமை இவரையே சாரும். இவருடைய காலத்தில் பாடசாலைச் சுற்றுமதில் கட்டப்பட்டது. பாடசாலையில் பான்ட் வாத்தியக்குழு இவராலேயே முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது. 

1998 முதல் 2003 வரைஇ திரு.கு.சண்முகநாதன் அவர்கள் அதிபராகக் கடமை புரிந்தார். இவர் சமய தத்துவங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். கணினிக் கல்விக்கு முக்கி யத்துவம் கொடுத்து கணினி அறையை அமைத்துக் கொடுத்தார். இவரால் பாடசாலை முகப்பில் சரஸ்வதி உருவச்சிலை அமைத்தது குறிப்பிடத்தக்கது. 

2003 முதல் 2005 வரையான காலப் பகுதியில் திரு.க.ஜெகநாதன் அவர்கள் பதில் அதிபராகக் கடமைபுரிந்தார். இவர் பல்வேறு இடர்ப்பாடுகளின் மத்தியிலும் குறுகியகால சேவையில் பாடசாலைக்குச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2005 முதல் 2015வரை திரு.ச.சிவநேஸ்வரன் அவர்கள் எமது கல்லூரியின் அதிபர் பதவியை வகித்தார். கல்லூரியின் முன்னேற்றத்திற்கும், அபிவிருத்திக்கும் தனது அறிவைச் சிறந்த முறையில் பயன்படுத்தி, இன்று கல்லூரி புத்தெழில் பெற்று ஓங்கி நிற்கின்றது. இவர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பவற்றுடன் இணைந்து கல்வி, விளையாட்டு மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் தேவையான நிதியையும், உதவியையும் பெற்று கட்டிடங்கள், நவீன கற்றல் வசதிகளை உருவாக்கி ஆசிரியர் மாணவர்களது கற்பித்தல் – கற்றல் செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தார். 

அதிபர் சிவநேஸ்வரன் அவர்களது காலம் மீண்டும் மானி அன்னைக்கு உன்னத மான பொற்காலம் என்றே கூற வேண் டும். போர்ச் சூழல் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த மாணவர்களின் தொகை 450இலிருந்து 1000க்கு மேலாக அதிகரித்து. பாடசாலைக் கட்டிடங்களில் துரித முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

இவருடைய காலத்தில்தான் R.V.ஆறுமுகம் விளையாட்டரங்கு, துரைராஜா திறந்தவெளி அரங்கு, மித்திரன் அரங்கு, சிவதாசன் அரங்கு, பிரார்த்தனை மண்டபம் (1990-91இல் ஆரம்பிக்கப்பட்ட கனடா பழைய மாணவர் சங்கம்), முதலியார் மகேசன் மண்டபம் போன்றவை அமையப் பெற்றமை இங்கு குறிப்பிடத் தக்கது. மருத்துவ, பொறியியல், வர்த்தக, கலைத் துறை போன்றவற்றிற்கான பல்கலைக்கழக அனுமதியை பெருமளவு மாணவர்கள் பெற்றனர். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக 2007ல் பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டியில் தடம் பதித்து மூன்றாம் இடத்தைப் பெற்றமையும், 2009ல் தங்கப் பதக்கம் பெற்றமையும் அதிபர் சிவநேஸ்வரன் அவர்கள் காலத்திற் குரியதே. இதனூடாக யாழ்ப்பாண பாடசாலை உதைபந்தாட்ட வரலாற்றில் கடந்த 50 ஆண்டு காலப் பகுதியில் தேசிய மட்ட வெற்றியைப் பெற்று மானிப்பாய் இந்துக் கல்லூர சாதனை படைத்தது. இப்பெருமை நூற்றாண்டு விழாக்காலப் பகுதியில் இடம்பெற்றமை கல்லூரிச் சமூகத்தால் மறக்க முடியாத மகிழ்வான நினைவுப் பதிவாகும். 

2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் திரு.S.இந்திரபாலா அவர்கள் பதில் அதிபராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் Chari Block புனரமைக்கப்பட்டது. இதனால் தரம் 6,7,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் மிகவும் பயனடைந்தனர். மேலும் இவருடைய காலத்திலேயே 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித்திட்டம் எமது பாடசாலைக்கு உரியதாக்கப்பட்டது. இதனால் க.பொ.த சாதாரண தரம் பூர்த்தி செய்யாத எமது பாடசாலை மற்றும் வேறு பாடசாலை மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். அத்தோடு கணிதக்கண்காட்சி, முத்தமிழ்விழா என பலவகையிலும் சிறப்பான ஆசிரியர், மாணவர்களின் பங்களிப்புடன் பாடசாலை நடைபெற்றது. 

இவை மட்டுமன்றி இவருடைய காலத்திலேயே மருதடியானின் புகழ்பாடும் இறுவட்டு வெளியீடு செய்யப்பட்டது. இதற்கான எமது பாடசாலை ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் பங்களிப்பு மிக மகத்தானது. மேலும் கலைத்துறையில் ஒரு மாணவன் தேசியரீதியில் இரண்டாம் நிலையை  பெற்றமை பாடசாலையின் புகழை பன்மடங்காக உயர்த்தியது. 

2018-2020 காலப்பகுதியில் பதில் அதிபராகப் பொறுப்பேற்ற திரு.சி.இந்திரகுமார் அவர்கள் கோவிட் தொற்று இடம்பெற்ற இக்கட்டான கால கட்டத்திலும் பாடசாலைக்குச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020இல் திரு.செ.இளங்கோ அவர்கள் பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்றார். இவருடைய காலத்தில் பாடசாலையின் 8 துறைகளுக்குமான கோவைகள் யாவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு பேணப்பட்டன. மேலும் பிரதிஅதிபர்கள், பகுதித்தலைவர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என அவரவர் நிலைகளுக்கேற்ப தனித்தனி பணியிடங்கள் பிரிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டன. வகுப்பறைகளில் அறிவித்தல் பலகைகள், கற்பித்தல் உபகரணங்களுக்கான பெட்டிகள் அமைக்கப்பட்டன. இவை மட்டுமன்றி பாடசாலைக்கான திட்டமிடலுடன் கூடியதான வரைபடம் பாடசாலை முகப்பில் காட்சிப்படுத்தப்பட்டது. 

உடற்பயிற்சிக்கூடம், பேராயிரவர் கட்டடத்தொகுதி என்பன திறந்து வைக்கப்பட்டன. விழாக்களில் உபசரிப்பு பணிக்கான கழகம் உருவாக்கப்பட்டு, கழக மாணவர்களுக்கான உடை, உபசரிப்பு பணிக்கான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

மேலும் ஆசிரியர்களுக்கான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இவை மட்டுமன்றி நீண்ட இடைவெளியின் பின்னர் நாடகவிழா இரவு நடத்தப்பட்டதுடன் ஆசிரியர்கள், பழைய மாணவர்களுக்கான நாடகங்களும் ஒழுங்கமைக்கப்பட்டன.

செஸ் கழகம் திரு இளங்கோ அதிபராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டது அத்துடன் பல காலமாக செயற்படாமல் இருந்த பாடசாலைக்கான இணையத் தளத்தை மீள செயற்படுத்தவும் வழிவகுத்தார். மாணவர் பாராளுமன்றத்திற்கான செங்கோல் இவர் காலத்திலேயே உருவாக்கப்பட்டது. இவை மட்டுமன்றி மானி இந்துவிற்கும் சாவகச்சேரி இந்துவிற்கும் இடையிலான Big Match துடுப்பாட்ட போட்டியை ஓழுங்கமைத்து சிறப்பான வகையில் நிகழ்த்திக்காட்டினார்.

மேலும், இவருடைய காலத்திலேயே நீண்ட இடைவெளியின் பின்னர் மருத்துவபீடத்திற்கு ஒரு மாணவன் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன், பல்கலைக்கழக அனுமதியிலும் மானி இந்துவின் தொடர் வளர்ச்சியினைக் காணமுடிந்தது. இவ்வாறாக பாடசாலை கட்டமைப்புடன் கூடிய ஒழுங்கமைப்பிற்கு இவரின் சேவை மிக முக்கிய காரணமானது.

2024ம் ஆண்டு அதிபர் திரு.இளங்கோ அவர்கள் பதவி உயர்வு பெற்று சேவை மாற்றலாகி சென்ற பின்னர், அவருடன் பிரதி அதிபராகப் பணியாற்றிய திரு.து.திலீப்குமார் அவர்கள் பாடசாலையின் பதில் அதிபராகப் பொறுப்பேற்றார்.

இவர் பதவியேற்று சில மாதங்களுக்குள்ளாகவே கல்லூரி ஈட்டிய வளர்ச்சி அசுர வேகத்தில் அமைந்திருந்தது. அதற்கு முத்தாய்ப்பாக அமைந்ததுதான் முத்தமிழ்விழா. இது தமிழுக்கான விழாவாக மட்டுமின்றி எமது பாடசாலையில் உயர்நிலையை உலகிற்கு அறிவிக்கும் விழாவாக அமைந்திருந்தது. இந்நிகழ்வு பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் யாவரையும் கல்லூரியின் பால் ஈர்த்தது என்பதில் சிறிதும் ஜயமில்லை .

பாடசாலையில் முத்தழிழ் வித்தகர் விபுலானந்தருக்கு சிலை அமைத்தமை, பிரமாண்டமான இடம்பெற்ற ஊர்வலம், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தமை என அனைத்து விடயங்களிலும் ஒரு பிரமாண்டமும் தரமும் பேணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பெரும் பங்காளிகளாக பழைய மாணவர்கள் தொழிற்பட்டமை பாடசாலையில் மீதான அவர்களின் ஈடுபாட்டையும் நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகின்றது.

இவைமட்டுமன்றி மூன்றாண்டுத்திட்டம், அதற்கு நிகழ்த்தப்பட வேண்டிய பௌதீகவள வேலைகள், கற்றல்- கற்பித்தல் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு இணைபாடவிதான செயற்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற பாடசாலையின் சகல அம்சங்களிலுமான அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை திட்டமிட்டு அறிக்கைப்படுத்தினார்.

இவ்வாறு இவருடைய ஒவ்வொரு செயற்பாட்டிலும் மானி அன்னையின் மீது கொண்டிருந்த தீராதகாதலை அவதானிக்க முடிந்தது. அவரின் வேகமான செயற்பாட்டிற்கு தனது சேவைக் காலத்தின் நிற்சயமற்ற தன்மையும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஆகவே இருக்கும் சொற்பகாலத்தினுள் தன்னால் இயன்ற முழுசக்தியையும் பிரயோகித்து தன் அன்னையின் நீணட கால வளர்ச்சிக்கான திட்டங்களை, தூரநோக்கத்தோடு சிந்தித்து செயலாற்றும் செயல்வீரனாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

Source : Manipay Hindu College century year magazine 2010 and School principal desk